×

"திமுக வெற்றிபெற பிரதமர் மோடியும் காரணம்"- உதயநிதி ஸ்டாலின்

 

சென்னை பிராட்வேயில்  திமுக பவள விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 75 வயது நிரம்பியோருக்கு நிதியுதவி, சான்றிதழ், நினைவுப் பரிசும் மற்றும் 60 வயதைக் கடந்த 1000 நபர்களுக்கு நிதியுதவிகளையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. முதலாவது காரணம் நரேந்திர மோடி  தான். அவர்தான் திமுகவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார். நான் 23 நாட்கள் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்தேன். அப்போது நான் சந்தித்த மக்கள் அனைவரிடமும் பாஜக மீது வெறுப்பு இருந்தது. அதை தொடங்கி வைத்தது மோடி தான். தமிழ்நாட்டில் புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளின் போது ஒருமுறை கூட வராத மோடி, நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகு 8 முறை முறை தமிழகத்தில் பிரச்சாரத்திற்காக வந்தார். பிரச்சாரம் முடிந்த பிறகும், கன்னியாகுமரி விவேகானந்தர் சிலையில் தியானம் செய்கிறேன் என்று கூறி சினிமா ஷூட்டிங் கூட அவ்வளவு சிறப்பாக நடைபெறாது, அந்த அளவு விதவிதமாக கேமரா ஆங்கிள் வைத்து படம்பிடித்தார். அவருடைய பருப்பு வடநாட்டில் வெந்திருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் என்றும் வேகாது.


தமிழகத்திற்கான உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டது. அதற்காக நாம் போராடி வருகிறோம். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் அதற்கான உதவித்தொகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் அந்த புதிய கல்வி கொள்கையில் மும்மொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உள்ளது. மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்பட்டபோது தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, ஆனால் மத்திய அரசு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் வழங்கவில்லை. ஜிஎஸ்டி வரியாக 1 ரூபாய் வழங்கினால் அதற்கு 28 பைசா மட்டுமே திருப்பி வழங்குகிறார்கள். இது போன்றவற்றை மக்கள் உணர்ந்ததன் காரணமாக திமுகவை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு 2வது காரணம், 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம்.  கடந்த மூன்று அரை ஆண்டுகளில் 520 கோடி மகளிர் பயணம் செய்துள்ளனர்...இதன் மூலம் ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் சேமிக்கின்றனர்.முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 1-5 வகுப்பு படிக்கும் பள்ளி குழந்தைகள் 20 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கியுள்ளன.மற்ற மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. 3வது காரணம் திமுக உறுப்பினர்களாகிய நீங்கள் தான்” என்றார்.