×

தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் தொடங்கலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது  - மு.க.ஸ்டாலின் பேச்சு.. 

 

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில்  ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 51,157 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து   17,616 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற 19 புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த புதிய தொழில் திட்டங்கள் மூலமாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 9.74 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இந்த முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதும் நமது கடமை முடிந்துவிட்டது என தமிழக அரசு நினைப்பதில்லை. மாநாடு நடத்துவதைவிட அதன்மூலம் வரும் முதலீடுகளில் தான் மாநாட்டின் வெற்றி உள்ளது. எனவே, இதை கடமையாக நினைக்காமல் தன்னார்வத்தோடு செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறோம். இதில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் தொழில்துறை அதிகாரிகளின் பங்களிப்பு பாராட்டுக்கு உரியது. இதன் தொடர்ச்சியாக 19 வகையான திட்டங்களை இன்று நான் தொடங்கிவைத்துள்ளேன். ரூ.17,616 கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்களின் மூலம் 64,968 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழில் வளர்ந்தால் மாநிலமும் வளரும்; மக்களின் வாழ்க்கையும் வளரும். அனைத்து மாவட்டங்களிலும் தொழில் தொடங்குவதன் மூலம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியடையும். பெண்கள் பணிபுரியும் மாநிலத்தில் பெண்களுக்காகவே பல்வேறு திட்டங்களும் உள்ளன. தமிழ்நாட்டு இளைஞர்களின் திறமையை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் தொடங்கலாம் என்ற நம்பிக்கை தொழில் துறையினருக்கு வந்துள்ளது. எனவே இங்கே முதலீடு செய்து தொழில் தொடங்குபவர்கள் தமிழ்நாட்டின் தூதுவர்களாக மாறி மற்ற தொழில் நிறுவனங்களையும் அழைத்துவர வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் ” என்று கூறினார்.