×

நிதி நெருக்கடி பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்! திமுக எம்பிக்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.


நாடாளுமன்ற குளிர்கால  கூட்டத் தொடர் வருகின்ற 25-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் பாஜக கவனமாக இருக்கிறது, அதற்கு நாம் இடம் கொடுத்துவிட கூடாது . தமிழ்நாட்டிற்கான தேவைகள், நிதி நெருக்கடி குறித்து குரலெழுப்ப வேண்டும். புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள், 2 மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாடுகளை எம்பிக்கள் அறிக்கையாக தர வேண்டும் என திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

🔷 தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதியான செயல்பாடுகள் பற்றி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

🔷 பாஜக அரசின் பாசிசத் தன்மைக்கு எதிராகவும், இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டவும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உறுதியாக எடுப்போம் என இக்கூட்டம் உறுதி அளிக்கிறது

🔷 சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் வக்ப் வாரிய திருத்தச் சட்டம், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல், மாநிலங்களுக்கான அதிகாரங்களை அபகரிப்பது, நிதி ஒதுக்கீட்டில் - பேரிடர் நிதி வழங்குவதில் பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளிடம் காட்டும் பாராமுகம், ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி குறைப்பு, இளைஞர்களை திண்டாட வைக்கும் 9.2 விழுக்காட்டிற்கு மேலான வேலை வாய்ப்பின்மை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையிலான சமூகநீதிக்கு எதிரான  நடவடிக்கைகள் போன்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக, மக்கள், அரசியல் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராக திமுகவின் உயர்நிலைச் செயல்திட்டக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிரொலிப்போம்.