×

"ராமதாஸ்க்கு வேறு வேலை இல்லை; தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டுக்கொண்டு இருப்பார்"- மு.க. ஸ்டாலின்

 

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உடல், மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் -ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார். ரூ.3.08 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ள சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான முக்கியமான ஆறு சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது குறிப்பாக உடல் நலத்திற்கான பிசியோதெரபி உடற்பயிற்சி மனவளத்தை மேம்படுத்தும் வகையிலான பயிற்சி, ஆற்றுப்படுத்துதல் கண் தொடர்புடைய பிரச்சினைகளுக்கான சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.

பின்னர் தனியார் அறக்கட்டளை பங்களிப்புடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட எழில் நகரில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியை ஆய்வு செய்ததோடு மரகன்றுகளையும் நட்டுவைத்தார். முன்னதாக கண்ணகி நகர் பகுதிக்கு வந்த முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமகள் அளித்த உற்சாக வரவேற்பால் வாகனத்தில் இருந்து இறங்கி பொதுமக்களிடம் உரையாடினார். குழந்தைகளை கையில் வாங்கி முத்தமிட்டு கொஞ்சி மகிழுந்த முதலமைச்சர். சில குழந்தைகளுக்கு பெயர் வைத்தார். மூதாட்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பகுதி வாழ் மக்களிடம் சிரித்தப்படியே  நலம் விசாரித்து கருத்துகளை கேட்டார். தொடர்ந்து இளைஞர்களிடனும், இளம் பெண்களுடனும் செல்பி எடுத்துக் கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் பெய்யாது என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் அனைத்திற்கும் தயாராக உள்ளோம். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டம் நடத்தி நாடாளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும்? என்ன விவாதிக்க வேண்டும்? என அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறோம். தமிழ்நாடு நலன் சார்ந்து பேசுவதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதானி விவகாரத்தில் அமைச்சர் ஏற்கனவே உரிய முறையில் பதில் அளித்துள்ளார். நீங்கள் இதை பெரிது படுத்த வேண்டாம், பா.ம.க.தலைவருக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை விடுகிறார். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவை இல்லை” என்றார்.