நான் வைக்கும் அனைத்து டெஸ்ட்களிலும் உதயநிதி ஸ்டாலின் சதம்- மு.க.ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் "உயிரினும் மேலான" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்ற நிலையில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு இன்று சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் முதல் 3 இடம் பிடித்த போட்டியாளர்களுக்கு முதல் பரிசாக 3 லட்சமும், இரண்டாம் பரிசாக 2 லட்சமும், மூன்றாம் பரிசாக ஒரு லட்சமும் வழங்கினார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர்கள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது அளவில்லாத வகையில் பெருமை அடைந்து இருக்கிறேன். 3 வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டி மட்டுமல்ல.. திமுகவின் கருத்தியலை அடுத்த நூற்றாண்டுக்கு தூக்கிச் சுமந்து செல்ல இருக்கும் பேச்சுப் போராளிகளை கண்டறிந்து.. பட்டைத் தீட்டும் பயிற்சி பட்டறை.. அப்படி பட்ட பட்டறையை கட்டி எழுப்பிய இளைஞரணி நடத்திக்கொண்டு இருக்கிறது என்பதுதான் என் பெருமைக்கு காரணம். திமுக என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம். அந்த காலத்தில் பேசி பேசி ஆட்சியைப் பிடித்தோம் என சொல்வார்கள். ஆனால், அவர்கள் சொல்ல மறந்த அல்லது சொல்லாமல் தவிர்ப்பது என்னவென்றால்.. நாம் பேசும் பேச்சு எல்லாம் வெறும் அலங்கார அடுக்கு மொழி அல்ல.. உலகம் முழுக்க நடந்த புரட்சி, வரலாற்றை பேசினோம். உலக அறிஞர்களின் வரலாற்றை பேசினோம்.
நம் நாட்டில் நடைமுறையில் இருந்த மூடநம்பிக்கைகளை, கொடுமைகளை, பிற்போக்குத்தனம் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக பேசினோம். இரத்தம் கக்கிய நிலையிலும் அஞ்சாநெஞ்சர் பட்டுக்கோட்டை அழகிரி பேசினார். 95 வயதிலும் மூத்திர வாளியை சுமந்து கொண்டு வலியை தாங்க முடியாமல் பேசியவர் பெரியார. எல்லா தலைப்புகளிலும் மடைதிறந்த வெள்ளம் போல் பேசியவர் அண்ணா. அண்ணா உருவாக்கிய பேச்சாளர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் என பழந்தமிழை அழகிய தமிழில் பாமர மக்களுக்கு கொண்டு சென்றவர் கலைஞர். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் ராஜா ராணி படத்தில் கலைஞர் எழுதிய வசனத்தை ஒரு போட்டியாளர் பேசினார். அது சமூக வலைதளங்களில் வைரலானது.
இளைஞர் அணி செயலாளர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு. அந்த பொறுப்பை உணர்ந்து அவர் செயல்பட்டுவருகிறார். என்னைப் பொறுத்தவரை அந்த பொறுப்பை அவருக்கு கொடுத்தது ஒரு பயிற்சியாக நான் கருதுகிறேன். நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்ட்களிலும் உதயநிதி ஸ்டாலின் சதம் அடிக்கிறார். 2019ல் அதிமுக ஆட்சிக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், கொரோனா காலத்தில் உதவிகள், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள், திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான பணிகளை அவர் செய்து கொண்டு வருகிறார்.
சேலத்தில் இளைஞர் அணியின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இளைஞர் அணி மாநாட்டை நடத்திக் காட்டினார். அந்த மாநாட்டில் நான் பேசியபோது, களப்போர் வீரர்களுக்கு துணை நிற்கும் போர்வீரர்கள் தயாராகி விட்டார்கள் என்று நான் சொன்னேன். அந்த களப்போர் வீரர்களுக்கு துணை நிற்கும் சொற்போர் வீரர்களை அடையாளம் காணும் முன்னெடுப்பு தான் இது. இந்த முன்னெடுப்பு மூலமாக அடையாளம் காணப்பட்ட உங்களால் இந்த கழகம் வளர்ச்சி அடையும். நம் தமிழ்நாடும் மேன்மை அடையும், திமுக வளரும், திமுகவால் தமிழ்நாடு வளரும். இதுதான் நம் லட்சியம். அந்த லட்சிய பாதையில் இளைஞர் அணி வேகமாக நடை போடுகிறது. அதற்கு உதயநிதிக்கும், அவருக்கு துணை நிற்கும் அனைவருக்கும் நன்றியையும்.. பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கழகத்துக்கு 100 பேச்சாளர்களை தேர்வு செய்யும் பணியை திமுக இளைஞரணிக்கு வழங்கியிருந்தேன். 17,000 போட்டியாளர்கள், 78 நடுவர்கள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு என பிரம்மாண்டமாக விழாவை நடத்துகிறார்கள். நான் கேட்டது 100 பேச்சாளர்கள் ஆனால் தற்பொழுது 182 பேச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வாகை சூடி உள்ள 3 பேருக்கும் வாழ்த்துகள். இவர்களுக்கு ஒரு லட்சம், 75 ஆயிரம், 50 ஆயிரம் என பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் அணிக்கு ஒரு வேண்டுகோள். சொற்களை வென்ற இவர்களுக்கு பரிசு தொகையை நிங்கள் உயர்த்தி வழங்க வேண்டும்* வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வழங்க வேண்டும் என உத்தரவிடுகிறார். 17,000 படிகளை தாண்டி வென்று இருக்கிறார்கள். 17,000 பேரும் பாராட்டுக்குரியவர்கள் தான். வெற்றி, பரிசை தாண்டி போட்டிகளில் பங்கேற்பதுதான் முக்கியம். 182 போட்டியாளர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அப்பொழுதே நான் இந்த கோரிக்கையை உதயநிதி இடம் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். திமுகவின் தலைவராக சொல்கிறேன் இனி நடக்கும் எல்லா பொதுக் கூட்டங்களிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் 182 பேச்சாளர்களையும் பயன்படுத்த வேண்டும். இவர்கள் வெறும் பேச்சாளர்கள் அல்ல.. வருங்கால திராவிட இயக்கத்தின் தலைமுறை” என்றார்.