கோவை செல்வராஜ் மறைவு கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் அவர்கள் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, கழகத்தின் கொள்கைகளை, கருத்துகளை விவாதங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் ஆணித்தரமாக எடுத்து வைத்தவர்.
சமீபத்தில் நான் கோவை சென்றிருந்த போது, அங்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் என்னைச் சந்தித்து, "நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது" என்று நெஞ்சாரப் பாராட்டிவிட்டு, "மகனின் திருமணத்தை வைத்திருக்கிறேன். திருமணம் மணமக்களுடன் வந்து தங்களிடம் சென்னையில் வாழ்த்து பெறுகிறேன்" என்றார். ஆனால் இன்று மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே, அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி, என்னை ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. திரு.கோவை செல்வராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.