×

இஸ்லாமிய சமுதாயத்தினரைக் கொச்சைப் படுத்தியிருக்கிறார்  மோடி - செல்வப்பெருந்தகை ஆவேசம்!!

 

இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ‘நவீன கோயபல்ஸ்’க்கு உரிய படிப்பினையை மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இராஜஸ்தானில் பிரதமர் மோடி மேற்கொண்ட போது, ஆதாரமற்ற அவதூறு அடிப்படையில், சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை திரித்து, 2006இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதன் முன்பகுதியையும், பின்பகுதியையும் விட்டுவிட்டு இடையில் சில வார்த்தைகளை மேற்கோள் காட்டி திரிபு வாதங்களைச் செய்திருக்கிறார்.

அவரது இந்தப் பரப்புரையின் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்திருக்கிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக்காக சமூகப் பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, ‘தாய்மார்களிடம், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்குக் (இஸ்லாமியர்களுக்கு) கொடுப்போம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார்.

மேலும், “அதிக குழந்தைகளைப் பெற்றுகொள்பவர்கள் ஊடுறுவல்காரர்கள்” என மறைமுகமாக இஸ்லாமிய சமுதாயத்தினரைக் கொச்சைப் படுத்தியிருக்கிறார். இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்படும் பிரதமர் மோடிக்கு இனிவருகிற தேர்தல்களில் மக்கள் உரிய பாடத்தைப்புகட்டுவார்கள்.

இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ‘நவீன கோயபல்ஸ்’க்கு உரிய படிப்பினையை மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி! என்று குறிப்பிட்டுள்ளார்.