வெள்ள பாதிப்புகளை பிரதமர் கேட்டறிந்தார்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி. தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமரிடம் தமிழகத்தின் வெள்ள பாதிப்புகளை விளக்கினேன். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். வெள்ள பாதிப்பு மதிப்பீடு பணிகளை ஒருங்கிணைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில அரசு மேற்கொண்டுள்ள மீட்பு, நிவாரண பணிகள் குறித்தும் பிரதமரிடம் விளக்கினேன். பிரதமரிடம் மீட்பு மற்றும் நிவாரணம் பணிகள் தொடர்பாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை கூறி, வெள்ள நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க கோரியுள்ளேன். இரட்டை பேரிடரை சமாளிக்க மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் உறுதி அளித்தார்” என்றார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் குடியிருப்புகளை சுற்றியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டும், பொது மக்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.