×

”கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வெற்றியடைய வாழ்த்துகள்”- மோடி

 

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நடைபெறவிருப்பது அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இவ்விழா இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான கலைஞர் அவர்களுக்காக நடைபெறும் முக்கியமான விழாவாகும் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகப் பணிகள் ஆகிய பல்வேறு களங்களில் உயர்ந்து விளங்கிய தலைவராக திகழ்ந்த கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் எப்போதும் அக்கறை கொண்டவராக விளங்கினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு சிறந்த அரசியல் தலைவராக திகழ்ந்த கலைஞர் அவர்கள், மக்களால் பலமுறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பதவியிலிருந்து சமூக வளர்ச்சி மற்றும் அரசியல் குறித்த அவரது ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் நமது நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். பன்முகத் திறமை கொண்ட கலைஞர் அவர்கள், தனது எழுத்துக்களின் மூலம் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன என்றும், அவரது இலக்கிய ஆற்றல், அவரது படைப்புகளின் மூலம் பிரகாசித்தது மட்டுமல்லாமல், அவருக்கு 'கலைஞர்' என்ற அன்பான பட்டத்தையும் பெற்றுத் தந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நினைவு நாணயம் வெளியிடப்படுவதன்மூலம், கலைஞர் அவர்களின் நினைவு போற்றப்படுகிறது என்றும், இந்த நினைவு நாணயம்  கலைஞர் அவர்கள் பின்பற்றிய கொள்கைகள், மரபுகள் மற்றும் அவரது பணிகளை என்றென்றும் நினைவூட்டுவதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த முக்கியமான தருணத்தில் கலைஞர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்த விரும்புவதாகும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி நாம் நம்பிக்கையுடன் நடைபோடும் இந்த வேளையில், கலைஞர் போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும், நம் தேசத்தின் பயணத்தைத் தொடர்ந்து வடிவமைக்கும் என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.