குரங்கம்மை பாதிப்பு- விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் மா.சு.
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை, விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனியார் ரோட்டரி கிளப் சங்கத்துடன் இணைந்து 10,000 பயனாளிகள் பயனடையும் செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதல்வர் வழிகாட்டுதல் படி மக்கள் நல்வாழ்வு துறையில் தினம்தோறும் பல்வேறு வகையான புதிய புதிய கட்டமைப்புகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை ஒரு நூற்றாண்டைக் கடந்த பழமை வாய்ந்த மருத்துவமனையாகும், கடந்த காலங்களில் சென்னையை ஒட்டி இருக்கக்கூடிய புறநகர் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையின் சேவையை பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் பழமை வாய்ந்த இந்த மருத்துவமனை கடந்த காலங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த மருத்துவமனையில் 26 அறை ரூபாய் கோடி ரூபாய் மதிப்பில் 6 தளங்களுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 36 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இருந்தது, தினம் தோறும் 1000க்கும் மேற்பட்ட புறநானிகள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வந்த நிலை இருந்தது, தற்போது 1500 மேற்பட்ட புற நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது, ஒன்றிய மருத்துவத்துறை அமைச்சர் நட்டா இந்தியாவில் குரங்கமை இல்லை என்று அறிவித்திருக்கிறார், தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை, தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஆடைகள் தவிர்த்து தெரிகிற உடல் பகுதியில் முகம் போன்ற பகுதியில் குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள். யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். பயணிகளுக்கு விழிப்புணர்வு சூப்பராகைகளை வைக்க சொல்லி உள்ளோம். நாளை மறுநாள் நான் நேரடியாக விமான நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன்” என்றார்.