×

 “2026ஆம் ஆண்டுக்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” - மு.க.ஸ்டாலின் 

 


சுதந்திர தினத்தையொட்டி  சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.  

இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழாவையொட்டி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து  சுதந்திர தின உரையை  நிகழ்த்திய அவர்,  திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.  அவர் தனது உரையில், மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன்.  

தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு. மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன்.  விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ₹20,000ல் இருந்து 21,000ஆக உயர்த்தி வழங்கப்படும்

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 65,000 இளைஞர்களுக்கு அரசு பணி கிடைத்துள்ளது. காலை உணவு திட்டத்தால் 20.73 லட்சம் மாணவர்கள் தினமும் சூடான, சுவையான உணவை சாப்பிடுகின்றனர்.  தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.  சமூகத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உடைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குகிறோம். 

பொதுப்பெயர் வகை மருந்துகள் ( Generic Medicines)மற்றும் பிற மருந்துகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில்,  முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.  தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும்; இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும். 

கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.  2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். திராவிட மாடலரசின் தமிழ்நாடு தொழில் துறை, புதிய பாய்ச்சலை கண்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.,