×

திருமணத்தை மீறிய உறவு - பெண் சிசுவை கால்வாயில் வீசிய தாய் : மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!!

 

பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. 

மதுரை பெதன்யாபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் பெண் சிசு சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு போலீசார் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் அகத்தியர் தெருவில் வசித்து வரும் ரேவதி தான் சிசுவை வீசி சென்றது தெரியவந்தது. இதை  தொடர்ந்து ரேவதியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.   அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  திருமணமான ரேவதி கணவரை பிரிந்து தனது தாய் மற்றும் 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.  தெரு ஓரங்களில் உள்ள பாட்டில்களை சேகரிக்கும் தொழிலில் இவர் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.  இதன் மூலம் அவருக்கு பலருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் கர்ப்பம் அடைந்த ரேவதிக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது.  ரேவதியின் தாய் தனலட்சுமி குழந்தை வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் குழந்தையை கழிவு நீர் கால்வாயில் ரேவதி வீசி சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரேவதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இருப்பினும் ரேவதியின் உடல்நிலை காரணமாக அவர்   மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.  சிகிச்சைக்குப் பின்னர் அவர் மதுரை பெண்கள் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது.