×

தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு - கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..

 

கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.  

2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதார மதிப்பை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை பெறுவதற்காக கடந்த மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். மொத்தம் 17 நாட்கள் சுற்றுப்பயண திட்டட்தில்,   சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கேட்டர்பில்லர் நிறுவனம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அதன் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்த உள்ளது. முதலமைச்சரின் இந்த அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இதுவரை16 நிறுவனங்களுடன் ரூ. 7,016 கோடி முதலீட்டிகான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.