2 நாட்களுக்குப் பின் தொடங்கிய மலை ரயில் சேவை.. ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்..
கனமழை மற்றும் தண்டவாளத்தில் மண் சரிவு காரணமாக 2 நாட்களாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.
உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலைரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. செங்குத்தான மலை பாதை வழியாக செல்வதால் மலை ரயிலில் பயணம் செய்யும்போ இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தப்படியே செல்வதால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவர்ந்துள்ளது இந்த மலை ரயில் சேவை. பொதுவாகவே மலையறையில் செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த நிலையில் கடந்த 15 ம் தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் மலை ரயில் செல்லும் பாதையில் பெய்த பலத்த மழையின் காரணமாக மலை ரயில் பாதையில் மண்சரிவுகளும், மழை நீரால் தண்டவாளத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பும் ஏற்பட்டது. இதனால் 2 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. தற்போது மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவுகளை சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து, மழையின் தீவிரமும் குறைந்துள்ளதால் மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. காலை 7.10 மணிக்கு வழக்கம் போல் புறப்பட்டு சென்றதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்..