×

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை நீதிமன்ற காவல்

 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை இம்மாதம் 31 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட வழக்கில் திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் - வாங்கல் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கிற்காக இன்று காலை 12 மணியளவில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 ல் ஆஜர்படுத்தினர். கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி சான்று அளித்து பத்திர பதிவு செய்தும், அடியாட்கள் வைத்து தன்னை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக நிலத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி, கொலை மிரட்டல், ஆள் வைத்து கடத்தி தாக்குதல் உள்ளிட்ட 6 சட்ட பிரிவுகளின் கீழ் 13 பேர்கள் மீது கடந்த மாதம் 22-ம் தேதி வழக்கு பதியப்பட்டது.

இந்த நிலையில், போலியான ஆவணம் கொடுத்து பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் கடந்த மாதம் 9-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு கடந்த மாதம் 14 ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 35 நாட்கள் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரளம் மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீசார் இம்மாதம் 16- ம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.இதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரை வாங்கல் போலீசார் நேற்று சம்பரதாய கைது செய்து, வழக்கின் தன்மை குறித்து அவருக்கு தெரியப்படுத்தி கையெழுத்து பெற்றனர்.

இன்று, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 ல்  ஆஜர்படுத்த திருச்சி மத்திய சிறையில் இருந்து அவரை வாங்கல் போலீசார் அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ்,  முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை இம்மாதம் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.