×

என் கால்களை நம்பித்தான் என் பயணம் இருக்கும் – சீமான்..!

 

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: “கூட்டணி என்பது எனக்கு சரிப்பட்டு வராது. நான் பெரிய கனவு கொண்டுள்ளேன். ஒரு நேர்மையற்றவன் நாட்டு மக்களையும் நேர்மையற்றவன் ஆக்குகிறான். ஒரு தலைவன் தான்தான் இதை செய்வேன் என இருக்க கூடாது. எனக்கு பின்னால் வரும் தலைமுறை இதை செய்யும் என்ற நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும். எங்கள் காலத்தில் வென்றால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் இன்னொரு தலைமுறைக்கு கையளித்து செல்வோம்.

நல்லாட்சி நடத்துவதற்கு எதற்கு விளம்பரம் தேவை. தாய்மார்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்?. படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்?. நல்ல ஆட்சி கொடுப்பதாக நாடும், மக்களும் சொல்லவில்லை. ஆட்சியில் இருக்கும் அவர்கள்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். இங்கு சேவை அரசியலோ, செயல் அரசியலோ இல்லை. வெறும் செய்தி அரசியல், விளம்பர அரசியல் மட்டும்தான் உள்ளது.

நல்ல ஆட்சி கொடுத்தால் மக்கள் அந்த தலைவனை சந்திக்க ஓடி வர வேண்டும். ஆனால் 200 ரூபாய் கொடுத்து மக்களை திரட்டி வரவேற்பு கொடுக்கிறார்கள். நல்லாட்சி கொடுப்பவர் ஏன் ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது?. மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதாக சொன்னார்கள். எத்தனை முறை திமுக ஆட்சியில் இருந்துள்ளது. ஏன் மழைநீர் வடிகால் வசதிக்கு நிரந்தர திட்டம் செயல்படுத்தப்படவில்லை?. 4 ஆயிரம் கோடி செலவழித்த பின்னர் ஏன் 1,500 படகுகள், ஆயிரக்கணக்கான நீர் இறைப்பு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன?.

காமராஜரே தான் நல்லாட்சி கொடுத்ததாக சொல்லவில்லை. நல்லாட்சி கொடுப்பவன் அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது மக்களுக்கே தெரியும். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். அதிகாரத்துக்கு தனித்து நின்று வர முடியாது என்று யார் சொன்னது?. என்னால் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாவிட்டாலும் என்னை தொடர்ந்து வரும் என் தம்பி, தங்கைகள் ஆட்சி அமைப்பார்கள்.

கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். என் கால்களை நம்பித்தான் என் பயணம் இருக்கும். அடுத்தவன் கால்களை நம்பி என் பயணத்தை தொடர முடியாது. எனவே கூட்டணி எனக்கு சரியாக வராது. கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை. விஜய் தற்போது கட்சி ஆரம்பித்து தனது கொள்கைகளை அறிவித்துள்ளார். ஆனால் அவரின் கொள்கைகளுக்கும் எங்களது கொள்கைகளுக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது முதலில் அவர் தனது கொள்கைகளை திருத்திக் கொள்ளட்டும்,” என்றார் சீமான்.