×

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி :  தேவநாதன் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முகாம்! 

 


தேவநாதனின் மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், நாளை உரிய ஆவணங்களுடன் புகர் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அழைப்பு விடுத்துள்ளனர். 

சென்னை மயிலாப்பூரில் உள்ளதி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் சுமார் 525 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.  இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநரும்,  பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் மற்றும் குணசீலன்,  மகிமை நாதன் ஆகிய மூன்று பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே  7 நாட்கள் காவலில் எடுத்து மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,  தேவநாதனின் 5 வங்கி கணக்குகள் உள்பட   நிதி நிறுவனத்தின் 18  வங்கி கணக்குகள், குணசீலன் மற்றும் மகிமைநாதனின் தலா 2 வங்கிக் கணக்குகள் என மொத்தம் 27 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.  

முன்னதாக  நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக  தேவநாதனின் தனியார் தொலைக்காட்சி (WIN TV) நிறுவன, அடையாறு, வண்ணாரப்பேட்டை ,சைதாப்பேட்டை, பெரம்பூர் ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்கள் என  8 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு தங்கள் மோசடிக்கு ஆளாகியுள்ளதாக சுமார் 3000 மேற்பட்டோர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.  

அத்துடன் முதலீட்டாளர்களுக்கு  வழங்கப்பட்ட ஏராளமான காசோலைகளும் வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.   மேலும் ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையுல் மயிலாப்பூர் நிதி நிறுவனம் மற்றும்  தேவநாதனால்  பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.  இதற்காக மயிலாப்பூரில் நாளை சிறப்பு முகாமுக்கும் பொருளாதாக குற்றப்பிரிவு போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.