×

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மகன் மர்ம மரணம்- கணவன் தலைமறைவு

 

அரக்கோணத்தில் ஒரே அறையில் தாய், மகள், மகன் ஆகிய மூவரும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் வளர்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார். விஜயன் நேருஜி நகர் பகுதியில் மெடிக்கல் ஷாப்  நடத்தி வருகிறார். இந்நிலையில் மனைவி மீனாட்சி அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகள் பவித்ரா டைப்ரைட்டிங் நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். மகன் யுவனேஷ் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மீனாட்சி, பவித்ரா மற்றும் யுவனேஷ் ஆகிய மூவரும் மர்மமான முறையில் வீட்டில் சடலமாக இருப்பதாக அவர்கள் உறவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அரக்கோணம் போலீசார் சென்ற போது வீட்டின் கதவை திறக்க முடியாததால் தீயணைப்பு துறை அதிகாரிகள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தாய், மகள், மகன் மூவரும் தரையில் சடலமாக கிடந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவர்கள் இருந்த அறையில் மின்விசிறியில் தூக்கிடுவதற்கு இருந்த கயிறு ஒன்று இருப்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மூவர் கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான தழும்புகள் இருந்ததால் காவல்துறை சந்தேக மரணம் பிரிவில் இவ்வழக்கை தொடர்ந்தனர். ஆனால் விஜயன் தலைமறைவாக உள்ளார். இவர்களது வீட்டில் தங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும் லெட்டர் எழுதி வைத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஒரே அறையில் மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை, ஆகையால் இவர்கள் மூன்று பேரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர் யார் அல்லது கொலை செய்துவிட்டு தற்கொலை போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அரக்கோணம் நகரத்தில் உள்ள பல்வேறு கடைகளில் சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இவ்வழக்கில் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.