‘கூண்டோடு விலகவில்லை... நாதக வலுவாக உள்ளது’- கோவை மண்டல செயலாளர் பரபரப்பு பேட்டி
கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு என வந்த செய்திகள் தவறானது எனவும், நேற்று கட்சியிலிருந்து விலகுவதாக சொன்னவர்கள் நாம் தமிழர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என கோவை மண்டல செயலாளர் வகாப் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் என்பவர் பேட்டியளித்தார். அப்போது சீமானின் தனிப்பட்ட ஆதிக்கத்தை பொறுத்துக் கொள்ளாமல் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அக்கட்சியின் கோவை மண்டல நாம் தமிழர் கட்சி செயலாளர் அப்துல் வகாப் மற்றும் மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள். “நாம் தமிழர் கட்சியில் மாவட்ட பொறுப்புகள் நீக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. தற்பொழுது தான் புதிதாக மாவட்ட வாரியாக நாம் தமிழர் கட்சி கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாமல் அவர்கள் யாரோ ஒருவர் தூண்டுதலின் பெயரில் தவறான தகவலை செய்தியாளர்களுக்கு கொடுத்து உள்ளனர். நாம் தமிழர் கட்சி கோவை மாவட்டத்தில் வலுவோடு இருக்கிறது. நாள்தோறும் அதிக உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் பிற கட்சியினர் இதுபோன்ற ஒரு சில நபர்களை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது, மக்களுக்கு ஆளும் கட்சி எந்த வகையில் பிரச்சனை ஏற்படுத்தினாலும், அதனை எதிர்த்து தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது. மேலும் திமுகவிற்கு எதிரியாக இருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் தங்கள் அனைவரும் ஏற்று கொள்ளும் விதமாகத்தான் இருக்கிறது” என தெரிவித்தனர்.