திமுக அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு- பாஜக
கோவில் சொத்துக்களை, ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது குத்தகைதாரர்களிடமிருந்து மீட்டது உயர்நீதி மன்றம் தானேயன்றி அரசு அல்ல என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு என்றும் 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை என்றும் இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் பெருமை கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால், இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான அறிக்கை. கோவில் சொத்துக்களை, ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது குத்தகைதாரர்களிடமிருந்து மீட்டது உயர் நீதிமன்றம் தானேயன்றி அரசு அல்ல.
பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த வழக்குகளில் வெளிவந்த தீர்ப்புகளின் அடிப்படையிலேயே கோவில் சொத்துக்கள் மீண்டும் கோவில்களின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன என்பதே உண்மை. அதை ஏதோ அரசு மீட்டது போன்று சொல்வது முறையற்றது. மேலும், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஹிந்து அறநிலையத்துறைக்கு எந்தவிதமான சட்டரீதியான உரிமையும் இல்லை. அதற்கான உரிமை அந்தந்த கோவில்களின் நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு. ஹிந்து அறநிலையத்துறை என்பது, கோவில் நிர்வாகங்களில் குறைகள் இருந்தால் குறைகளை களைய மேற்பார்வையிடும் அமைப்பு தானே தவிர கோவில்களை நிர்வாகம் செய்யும் துறை அல்ல என்றே சட்டம் சொல்கிறது. அப்படியிருக்க கும்பாபிஷேங்களை நடத்துவதற்கு ஹிந்து அறநிலையத்துறைக்கு எந்த உரிமையும் இல்லை எனும் போது அவற்றை நிகழ்த்துவதே சட்ட விரோதம்.
உங்கள் அரசில் நியமனம் செய்யப்படும் அறங்காவலர்கள் கூட நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகவே செய்யப்படுகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? கோவில்களின் வருமானத்தை ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகளால் சட்டத்திற்கு புறம்பாக செலவிடப்படுகிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? ஹிந்து அறநிலையத்துறை என்பது கோவில் நிர்வாகங்களில் சீர்கேடுகள் நிலவினால் அதை கண்காணிக்கும் துறை தான் என்பதும் கோவில்களை நிர்வகிக்கும் துறை அல்ல என்பதும் தங்களுக்கு தெரியுமா? ஆனால், வலுக்கட்டாயமாக கோவில்களின் நிர்வாகத்தை அரசே வைத்திருப்பதை நீதிமன்றங்கள் பல முறை கண்டித்தும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது தங்களுக்கு தெரியுமா? அரசு மற்றும் ஹிந்து அறநிலையத்துறை கோவில்களை விட்டு வெளியேறினால் மட்டுமே இறை நம்பிக்கையாளர்கள் போற்றுவர். அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.