×

CIBIL தரவுகளின் அடிப்படையில் கடன்கள் வழங்கும் முடிவுகளை மாற்ற வேண்டும் - நாராயணன் திருப்பதி

 

CIBIL தரவுகளின் அடிப்படையில் கடன்கள் வழங்கும் முடிவுகளை வங்கிகள் மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் நேற்று பாராளுமன்றத்தில் CIBIL அமைப்பு குறித்து பேசியது முழுமையாக ஏற்கத்தக்கதே. CIBIL சாமான்ய மக்களுக்கு பெரும் இடையூறாக இருப்பது உண்மையே. ஒருவர் ஏதேனும் ஒரு வங்கியில் கடன் பெற்று பல காரணங்களால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். குறிப்பாக வங்கிகளின் மீதே கூட தவறு இருக்க வாய்ப்பிருக்கிறது, ஒருவரின் வியாபாரம் கோரோனோ போன்ற இயற்கை பிரச்சனைகளால் மந்த  நிலைக்கு செல்ல வாய்ப்புள்ள நிலையில், அந்த நபருக்கு மேலும் நிதி உதவி கிடைத்தால் மட்டுமே இழந்ததை மீட்டெடுக்க முடியும் என்ற நிலையில், CIBIL என்ற நிறுவனத்தின் தரவுகளை அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டோரை மேலும் பாதிப்படைய செய்கிறது. 

ஆனால், வங்கிகள் CIBIL தரத்தின் அடிப்படையில் தான் கடன் வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் கொண்டு வரப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திரு.கார்த்தி சிதம்பரம் கூறுவது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், மாற்றங்களை திடீரென்று கொண்டு வருவதும், ஒட்டுமொத்த வங்கிகளின் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிக்கல்கள் பல இருந்தாலும் CIBIL தரவுகளின் அடிப்படையில் கடன்கள் வழங்கும் முடிவுகளை வங்கிகள் மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, வங்கிகள் உடனடியாக இதற்கான திட்டத்தை தீட்ட வேண்டும். இல்லையேல் சாமான்யனுக்கு நீதி கிடைக்காது போய் விடும் என்பதோடு கஷ்டத்தை, நஷ்டத்தை சந்தித்து கொண்டிருப்பவர்கள் அதிலேயே மூழ்கி விடுவார்கள் என்பது உண்மை தான் என குறிப்பிட்டுள்ளார்.