×

கலால்துறை அதிகாரிகள் பணம் வசூல் செய்து முதல்வரிடம் கொடுக்கின்றனர்- நாராயணசாமி

 

மரக்காணம் கள்ளசாராயம் உயிரிழப்புக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று  நாராயணசாமி தெரிவித்துள்ளார். 


புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் கள்ளச்சாராயம் இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மரக்காணத்தில் கள்ளச்சாராய சில்லரை விற்பனை செய்தோர் புதுச்சேரியைச் சேர்ந்த இருவரிடம் வாங்கியதாக வாக்குமூலம் தரப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தை புதுச்சேரியில் இருந்து கடத்தி சென்று தமிழகத்தில் விநியோகித்து உயிர்பலியான முழு பொறுப்பை புதுச்சேரி அரசு ஏற்க வேண்டும். 

கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் காவல்துறை, கலால்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச்சாராய பேர்வழிகளுக்கு புதுச்சேரி அரசு உடந்தையாக உள்ளது. காவல்துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராய விற்பனை அனுமதியை அரசு வேடிக்கை பார்க்கிறது. கலால்துறை அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வசூல் செய்து முதல்வர் ரங்கசாமிக்கு நேரடியாக பணம் தருவதை பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். தற்போது தமிழகத்தில் நடந்த உயிரிழப்புக்கு புதுச்சேரி அரசுதான் பொறுப்பு.

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தமிழகத்தில் ராஜினாமா செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. அதே கோரிக்கையை புதுச்சேரியிலும் முன்வைத்து முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வலியுறுத்துவாரா? இதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். ரங்கசாமி ஆணவம்தான் தமிழக உயிர்பலிக்கு முக்கியக்காரணம். என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமிழகத்துக்கு அனுப்பி உயிர்பலியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆட்சியாளர்களால் புதுச்சேரிக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. முதல் அமைச்சர் ரங்கசாமி எந்த கடவுளை வேண்டினாலும் பாவ மன்னிப்பு கிடைக்காது. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாதற்கு முக்கியக்காரணம் ஊழல்தான். இதற்கு சிபிஐ விசாரணை வைக்க தயாரா? மக்கள் கொதித்து போயுள்ளனர். கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் போராட வேண்டிய நிலை ஏற்படும். சில அரசியல் தலைவர்களும் இதில் கூட்டில் உள்ளதால் வாயை திறக்க மாட்டார்கள். தமிழக உயிரிழப்புக்கு புதுச்சேரி முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.