×

8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

 

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உயிரிழந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் என ஆறு பேரை கைது செய்தனர். இந்த வழக்கு என்.ஐ.ஏவிற்கு மாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட ஆறு பேரும் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின் தற்கொலை தாக்குதல் நடத்தி, மத வழிபாட்டு தளத்தை சேதப்படுத்தவும், அதன் மூலம் மத பிரச்சனைக்கு வழி வகுக்கவும் திட்டமிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் ஆன்லைன் மூலமாக வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் சென்னை, நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெறுகிறது. கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.