×

எம்.பி.பி.எஸ் முடித்தவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. 

 

இந்தியாவில் பதிவு செய்ய தகுதியுள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களும்  தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு  செய்ய  வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. 

இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், “இந்தியாவில் பதிவு செய்ய தகுதியுள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களையும் பதிவு செய்வதற்கான தேசிய மருத்துவ பதிவேடு (என்.எம்.ஆர்) இணையதளத்தை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா  ஆகஸ்ட் 23 ந் தேதி தொடங்கி வைத்தார். தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி தேசிய மருத்துவப்பதிவேடு பராமரிக்கப்படுகிறது. 

இந்தியாவில் உள்ள அனைத்து அலோபதி (MBBS) பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கும் என்எம்ஆர் ஒரு விரிவான  வெளிப்படையான   தரவுத்தளமாக இருக்கும். என்எம்ஆரின் தனித்தன்மை என்னவென்றால், இது மருத்துவர்களின் ஆதார் ஐடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தனிநபரின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.  அனைத்து மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள்  ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. சில தரவுகள் பொதுமக்களுக்குத் தெரியும், மற்றவை தேசிய மருத்துவ ஆணையம் (NMC), மாநில மருத்துவ கவுன்சில்கள் (SMCs), தேசிய தேர்வு வாரியம் (NBE) மற்றும்  மருத்துவப் பதிவு வாரியத்திற்கு (EMRB) மட்டுமே தெரியும்.   

ஏற்கனவே இந்திய மருத்துவப் பதிவேட்டில் (ஐஎம்ஆர்) பதிவு செய்துள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களும் என்எம்சியின் என்எம்ஆரில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.   மருத்துவர் பட்டம் (MBBS) சான்றிதழின் டிஜிட்டல் நகலையும், மாநில மருத்துவ கவுன்சில்,இந்திய மருத்துவக் கவுன்சிலின் பதிவுச் சான்றிதழையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.