ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு விழா- ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்
சென்னை ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
இன்று முதல் நவராத்திரி திருவிழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இந்த நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி அலங்காரத்தில் அனைத்து கடவுள்களையும் குறிக்கும் வகையில் அயோத்தி ராமர் சீதை, சிவன் பார்வதி, ஆறுபடை முருகன் மற்றும் மூன்று அம்பிகைகளை குறிக்கும் வகையில் துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் சிலைகள் மற்றும் இடம் பெற்றிருந்தது.
இதை தொடர்ந்து நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் பாரதி மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர்.என் ரவி குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். நாட்டுப்புற கலைகளில் ஒன்றான வில்லு பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது அதை தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தனது குடும்பத்தினருடன் கண்டுகளித்தனர்.