×


ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்- சிபிசிஐடி அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜர்! 

 

தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பணத்தை கொண்டு வந்ததாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரை கைது செய்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தனர். மேலும் இந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கைமாற்றப்பட்டு நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இது நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் மூவரும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மொத்தம் இதுவரை 15 நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் வாக்குமூலங்களை வீடியோ பதிவாக செய்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில்  நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கடந்த வாரம் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் உடன் ஆஜராகினார். இதையடுத்து தனி அறையில் வைத்து எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலங்களை வீடியோ பதிவு செய்து போலீசார் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகும் படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் இன்று சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவருடன் பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து தனி அறைக்கு அழைத்துச் சென்று நயினார் நாகேந்திரன் இடம் சிபிசிஐடி போலீசார் ரயிலில் பதிவு செய்யப்பட்ட பணம் குறித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான கேள்விகள் தயாரிக்கப்பட்டு அவரிடம் கேட்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் குறிப்பாக கைது செய்யப்பட்ட மூவரும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என தெரிவித்த காரணத்தினால் அது குறித்து கேள்விகள் எழுப்பப்படும் எனவும் மேலும் தமிழக பாஜகவில் இருந்து பணம் கொடுக்கப்பட்டதா, பணம் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய கொண்டு செல்லப்பட்டதா என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர் மற்றும் கேசவ விநாயகம் ஆகிறது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றத்தில் முறையிட்டனர். விசாரணை என்ற பெயரில் தங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அரசியல் ரீதியான தகவல்களை காவல்துறை எடுக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் தடை கேட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நைனார் நாகேந்திரன் தனது செல்போன் உடன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விசாரணையில் நயினார் நாகேந்திரன் மட்டுமல்லாது நெல்லை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக பொறுப்பாளராக போடப்பட்ட முரளிதரன் மற்றும் நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர் மணிகண்டன் ஆகியோரும் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். ஏற்கனவே பாஜக நிர்வாகிகள் உட்பட 15 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கேள்விகள் தயாரிக்கப்பட்டு கேட்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.இந்த விசாரணையானது மாலை வரை தொடரும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.