×

நீட் முறைகேடு - திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு 

 

நீட் முறைகேட்டை கண்டித்து ஜூன் 24ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக மாணவரணி அறிவித்துள்ளது.

 நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து ஜூன் 24 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது  நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி  ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.