×

முதுநிலை நீட் தேர்வு வழக்கு : உச்சநீதிமன்றம் நாளை விசாரணை..  

 


முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

எம்டி, எம்எஸ், எம். டிப்ளமோ உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகள் நீட் தேர்வு மூலம் நிரப்பட்டு வருகின்றன. அதன்படி 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இருந்து 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடுமுழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தி ருந்தனர். ஆனால் தேர்வுக்கு முந்தைய நாள்  முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியானது.  பின்னர் ஆகஸ்ட் 11ம் தேதி காலை, மதியம் என இருவேளைகளில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இளநிலை நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான சர்ச்சையே முடிவுக்கு வராத நிலையில், நேற்றைய தினம் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.  மருத்துவர்களுக்கான முதுநிலை நீட் வினாத்தாள் ரூ.70,000 வரை விற்கப்படுவதாகவும் புகார் எழுந்திருக்கிறது.  டெலிகிராம், வாட்ஸ் அப்  குரூப்களில் நடைபெற்ற chat-களின் ஸ்கீரின்ஷாட்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

ஆனால்  நீட் வினாத்தாள் கசியவிடப்பட்டதாக வாட்ஸ் அப் செயலியில் வெளிவரும் செய்தி முற்றிலும் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வரும் 11 ஆம் தேதி நடைபெறும் நீட் முதுகலை தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல் தவறானது, டெலிகிராம் சமூக வலைதளத்தில் முதுநிலை நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்வர்களை ஏமாற்றும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டது  தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் பலரும் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல்  வினாத்தாள் வெளியாகி விற்பனைக்கு வந்ததாக தகவல் பரவியதை அடுத்து, தேர்வை ஒத்திவைக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது.  முதுநிலை நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை  நாளை விசாரிக்கிறது.