×

பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே நாடு முழுவதும் நாளை முதுநிலை நீட் தேர்வு.. 

 


நாடு முழுவதும் நாளை முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறவுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில்  உள்ள எம்டி, எம்எஸ், எம். டிப்ளமோ உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகள் நீட் தேர்வு மூலம் நிரப்பட்டு வருகின்றன. அதன்படி 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்தும் இந்த நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடுமுழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தி ருந்தனர். ஆனால் தேர்வுக்கு முந்தைய நாள்  முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியானது.  


பின்னர் ஆகஸ்ட் 11ம் தேதி அதாவது நாளை  காலை, மதியம் என இருவேளைகளில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  நாடு முழுவதும் 259 நகரங்களில் முதுநிலை நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறையும் தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது, வினாத்தாள் கசிவு என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அத்துடன் முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் நாளை திட்டமிட்டபடி நாடு முழுவதும் முதுநிலை நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.