×

ரூ.9,000 கோடியில் புதிய கார் உற்பத்தி ஆலை.. செப்.28ல் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்.. 

 


 ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் புதிய Jaguar Land Rover கார் உற்பத்தி ஆலைக்கு செப். 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். 

தமிழகத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இலக்கு நிர்ணயத்துள்ளார். அதனை நோக்கிய பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் மற்றுமொரு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது.  இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள் பெறப்பட்டன.  

இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி மதிப்பில் 410 ஏக்கரில் புதிய உற்பத்தி ஆலையை டாடா நிறுவனம் அமைக்க உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேன்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் ஆலை தொடங்கப்படவுள்ளது.  இந்த புதிய கார் உற்பத்தி ஆலை மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.   செப்டம்பர் 28ஆம் தேதி ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். 

அன்றையதினமே ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மெகா காலணி உற்பத்தி ஆலைக்கு செப்.28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இந்த காலணி நிறுவனம் அமைவதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.