×

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடி- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு

 

தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள மூன்று சுங்கச்சாவடிகளுக்கான கட்டண விவரங்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 67 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வழக்கமாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படும். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் மாற்றப்பட வேண்டிய கட்டணம் ஜூனில் உயர்த்தப்பட்டது. 36 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் 1ம் தேதி மேலும் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 5 முதல் 7 சதவீதம் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தமிழகத்தில் மூன்று சுங்கச்சாவடிகளை புதிதாக திறக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளுக்கான கட்டண விவரத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் 60 முதல் 400 ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 95 முதல் 600  வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் 55 முதல் 370 ரூபாய் வரையிலும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 85 முதல் 555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகம்பட்டி சுங்கச்சாவடியில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் 60 முதல் 400 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 90 முதல் 600  வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ்கட்டணம் 340 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.