×

இப்போதும் இல்ல எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

 
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது: திமுகவை போல ஒரு மறைமுக கூட்டணியை எப்போதும் அதிமுக பின்பற்றுவது கிடையாது. திமுகவை போல உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்பது அதிமுகவில் கிடையாது. எடுத்த முடிவு எடுத்த முடிவு தான். பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. கட்சியின் இந்த நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. இதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கியுள்ளார். ஆனால் ஊடகங்கள் அதை திசை திருப்பி இருக்கின்றன, அது உண்மை இல்லை.

பிரதமரை எந்த அமைச்சராவது நேரில் சென்று பார்த்திருக்கிறார்களா?. பிரதமர் முதல்வர்களை சந்திப்பதே மிகவும் அரிது, அதிலும் குறிப்பாக சில முதல்வர்களை மட்டும்தான் பிரதமர் சந்திப்பார். குறிப்பாக அமைச்சர்களை பார்த்த வரலாறே கிடையாது. ஆனால் உதயநிதி, பிரதமர் மோடியை சென்று சந்திக்கிறார் என்றால் எந்த அளவுக்கு மறைமுக கூட்டணி இருக்கிறது.

திமுக என்கிற மக்கள் விரோத சக்தியை விரட்டி அடிக்க வேண்டும். அந்த வகையில் பாஜகவைத் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒத்த கருத்தோடு வரும்போது, இது குறித்து கட்சியும் பொதுச் செயலாளரும் முடிவு செய்வார்கள். இதைத்தான் எடப்பாடியும் தெரிவித்தார். ஆனால் அது திரித்து கூறப்பட்டுள்ளது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும் என்று ஜெயக்குமார் கூறினார்.

முன்னதாக, ‘எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா?’ என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள அனைவரும் அதிமுக கூட்டணியில் இணையலாம். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்றபடி எந்த கட்சி தலைமையிலான கூட்டணியில் யார் வருவார் என்பது தெரியவரும்.

தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. மற்ற திட்டங்களுக்கு நிதி இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். முட்டுகாட்டில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?” என தெரிவித்திருந்தார்.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட்டன. விரைவில் பாஜகவில் தேசிய அளவில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.