×

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை..! நீங்கள்தான் இந்தியை திணிக்கிறீர்கள்..! - தமிழிசைக்கு அன்பில் மகேஸ் பதிலடி..

 

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை! நீங்கள் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்தி மொழியை திணிக்கிறீர்கள் என தமிழிசை சௌந்தரராஜனுக்கு  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காட்டமாக பதிலளித்துள்ளார்.  

திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்திய சமூக நல்லிணக்க மீலாது மாநாடு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையா? மும்மொழிக் கொள்கையா? என தமிழிசை சௌந்தரராஜன் என்னை பார்த்து கேள்வி கேட்கின்றார். இது கழகத்தின் பொய்மொழி கொள்கையா? என்பதை பொய்யாமொழி அவர்கள்தான் விளக்க வேண்டும் என்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.

சிறுபான்மையினரை மட்டுமல்ல, சிறுபான்மையினர் பேசும் மொழிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதை உணர்ந்துதான் உருது மொழி எங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றதோ அந்த அரசு பள்ளிக்கு சென்று அன்பில்' என்னும் எனது பெயரை உருது மொழியில் எழுதினேன். சிறுபான்மையினருக்கு கழக அரசு அரணாக உள்ளது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள முடியுமா? சிறுபான்மையினரின் உடமைகளை மட்டுமல்ல அவர்கள் உயிராக கருதக்கூடிய அவர்களின் உருது மொழியையும் காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிந்து உள்ளோம். உருது மொழி கற்கும் அனைத்து மாணவர்களும் உருது மொழியில் கல்வி கற்கிறார்கள் என்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. 

மொழியை ஒரு காரணமாக வைத்து உருது மொழி கல்வி கிடைக்கவில்லை எனும் காரணத்தினால் அவர்கள் கல்வி அமைப்பிலிருந்து வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக உருது மொழி கல்வி நடைபெறுகிறது. உருது மொழியில் படிக்க "மாணவர்கள் விரும்பினால் அவர்கள் உருது மொழியில் எல்லா பாடங்களையும் படிக்கட்டும். அதற்கு நாங்கள் துணை நிற்கின்றோம்" என சொல்கின்றோம். 

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை! நீங்கள் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்தி மொழியை திணிக்கிறீர்கள். ஆனால் உருது மொழியை யாரும் திணிக்கவில்லை. சிறுபான்மையினர் பேசும் மொழியை நாங்கள் பாதுகாப்போம்.  சிறுபான்மையினர் என்றாலே உங்களின் கண்ணை உறுத்தும். ஏதாவது சீண்டிக்கொண்டே இருப்பீர்கள். அந்த சீண்டல் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது. இதை 2019 தேர்தலிலும் நிரூபித்து விட்டோம். 2024 தேர்தலிலும் நிரூபித்து விட்டோம். உங்களின் கனவுகள் எல்லாம் எடுபடாத இந்தியாவின் ஒரே மாநிலம் திராவிட மாடல் அரசை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடுதான்” என்று தெரிவித்தார்.