×

இந்து அல்லாதவர்களை கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை அல்லாதவர்கள்  கோவில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இந்து அறநிலையத்துறைக்கு என் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது. தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும் மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு உள்ள சூழலில் பழனி தேவஸ்தானத்தில் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது. எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, அரசுத் தரப்பில், மனுதாரர் கடந்தாண்டு ஜூன் 28ல் மனு அளித்துள்ளார். அதை பரிசீலனை செய்ய போதிய அவகாசமின்றி வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் வருகின்றனர் முருகனின் மீது நம்பிக்கை கொண்டுள்ள பல்வேறு மதத்தினரும் வழிபடுகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தின் 25 முதல் 28 வது பிரிவு வரை கூறப்படும் மதசார்பின்மையை அரசும், கோயில் நிர்வாகமும் பின்பற்றி வருகிறது. இந்து சமய முறைகளின் மீது நம்பிக்கை கொண்ட யாரும் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

பல கோயில்களில் இந்து அல்லாதவர்கள் கோயிருக்குள் அனுமதிக்கப் படுகின்றனர். கோயில் பழக்க, வழக்கத்தை ஏற்று வரும் யாரையும் தடுக்க முடியாது, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெளிநாட்டினருக்கு ரூ.50 கட்டணம் செலுத்தி கோயிலுக்குள் கொடிமரம் வரை வருகின்றனர். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினருக்கு அனுமதி உண்டு, திருவரங்கம் ரங்கநாதஸ்வாமி கோயிலில் முகலாய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பீபீ நாச்சியார், துலுக்கநாச்சியார் சன்னதி உள்ளது. இங்கு தினசரி ரொட்டி மற்றும் வெண்ணெய் படைத்து வழிபாடு நடக்கிறது. மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டது.

இதை கேட்ட நீதிபதி, மனுதாரர் கேட்கும் நிவாரணம் பழனி கோயிலுக்கு மட்டுமே பொருந்தும் என அரசுத் தரப்பு கூறுகிறது. ஆனால், இந்த விவகாரம் அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. அனைத்து மதங்களுக்கு இடையே சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே, கொடி மரத்தை தாண்டி இந்து அல்லாதோருக்கு அனுமதி இல்லையென கோயில் நுழைவு வாயில் கொடிமரம் அருகில் மற்றும் கோயிலின் முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத இந்து அல்லாதோரை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு கோயிலுக்கு வரும் இந்து அல்லாதோரிடம் இந்து மத நம்பிக்கை மற்றும் பழக்கத்தை பின்பற்றுவேன் என சம்மத உறுதி மொழி கடிதம் எழுதி வாங்கி கொண்டு அனுமதிக்கலாம். சம்மத கடிதம் கொடுத்து கோயிலுக்குள் அனுமதிக்கப் பட்ட இந்து அல்லாதோரின் விபரங்களை பதிவேடு வைந்து முறையாக பராமரிக்க வேண்டும் கோயில்களின் ஆகமவிதி மற்றும் வழக்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை அனைத்து இந்து கோயில்களிலும் பின்பற்ற சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.