'அதிகாரத்திற்கு எல்லோரும் அடிபணிந்துவிட மாட்டார்கள்.. 15 மாத கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி’ - ஜோதிமணி வாழ்த்து..!
“அதிகாரத்திற்கு எல்லோரும் அடிபணிந்துவிட மாட்டார்கள். அதை எதிர்த்து நின்று வெற்றியடைவார்கள் என்பதை இந்தியா கூட்டணித் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்” என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 12ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்தவகையில் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எவ்வளவோ கடினமான நாட்கள், துயரம் தனிமை எல்லாவற்றையும் தனது அசைக்கமுடியாத மன உறுதியோடு எதிர்கொண்டு வெற்றிபெற்றுள்ள திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கு எனது அன்பும், நல்வாழ்த்துக்களும்!
அதிகாரத்திற்கு எல்லோரும் அடிபணிந்துவிட மாட்டார்கள். அதை எதிர்த்து நின்று வெற்றியடைவார்கள் என்பதை இந்தியா கூட்டணி தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அமலாக்கத்துறையால் அநீதியாக கைது செய்யப்பட்டு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களும் சட்டப்போராட்டத்தை சந்தித்து வெற்றியடைந்துள்ளார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி . ” என்று குறிப்பிட்டுள்ளார்.