×


நவம்பர் 1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்!

 

தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த நாள். இந்த நாளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம். “குமரியின் தந்தை” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மார்ஷல் ஏ.நேசமணி ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட, தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்த, தமிழகத்தின் பூர்வீகப் பகுதியான, பீருமேடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், நெய்யாற்றின்கரை, விளவங்கோடு, தேவிக்குளம் ஆகியவை இருந்தன. இப்பகுதி மக்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த போதும் சில ஆதிக்க சக்தியின் அடக்குமுறையால் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் அவதியுற்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்து வரும் பகுதியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று விரும்பினர். இவர்களின் நிலையறிந்து தியாகி மார்ஷல் நேசமணி தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன் விளைவாக 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விளவங்கோடு, தோவாளை, கல்குளம், அகஸ்தீஸ்வரம் ஆகிய தாலுக்காக்கள், செங்கோட்டையில் பாதி தாலுக்கா தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. இதுவே இன்று தமிழகத்தின் எல்லையாக வரலாற்றில் சிறந்து விளங்குகிறது.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், திருத்தணியும் தென்குமரியும் இன்று தமிழ்நாட்டின் பகுதிகளாக இரு திசைகளில் திகழ்கிறதென்றால் அது எளிதில் நடந்துவிடவில்லை. எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற, தமிழ்நலம் மிக்க போராட்டத்தால்தான் நமக்குரிய பல பகுதிகளை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் பெறமுடிந்தது.