×

2026 தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் - சீமான் அறிவிப்பு

 

வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பல தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021ம் சட்டமன்ற தேர்தல், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் நாதக தனித்து களம் கண்டது. எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனிடையே நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன், நாதக கூட்டணி அமைக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், அந்த கட்சியின் கொள்கை, கோட்பாடு பிடிக்கவில்லை என சீமான் கடுமையாக விமர்சித்தார். இதனால் விஜயுடனும் கூட்டணி இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய சீமான், வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என கூறினார். 2026-ல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி எனவும், என் பயணம் என் கால்களை நம்பிதான் அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடர மாட்டேன் எனவும் கூறினார்.