×

நோயாளிகளுக்கு ஒரே சிரஞ்சை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் செவிலியர்கள்? அரசு மருத்துவமனையில் அவலம்

 

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரே சிரஞ்சை பயன்படுத்தி நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் தனது தாயார் கல்யாணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடந்த 27ஆம் தேதி மயிலாடுதுறை அரசினர் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு பணியில் உள்ள செவிலியர்கள், ஒரே சிரஞ்சை பயன்படுத்தி நோயாளிகளுக்கு  ஊசி போடுவதாக குற்றம்சாட்டி செல்போனில் வீடியோ எடுத்து செவிலியரிடம் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரின் குற்றசாட்டுக்கு செவிலியர் மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார். 


மேலும் அந்த வீடியோவை ஹரிஹரன் சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், தான் மருத்துவமனையில் இல்லாத நேரத்தில் நடக்க முடியாத தன் தாயாரை செவிலியர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து செவிலியர்கள் கடுமையாக பேசியதாக தெரிவித்துள்ள ஹரிஹரன், மருத்துவமனைக்கு வருகை தந்த  மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம்  புகார் மனு வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.