"பவதாரணி மறைவு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்" - ஓபிஎஸ்
இளையராஜாவின் மகளும் , பாடகியுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 47. சுமார் ஆறு மாதங்களாக இலங்கையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பவதாரணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணியளவில் காலமானார். பின்னணிப் பாடகியான பவதாரணி 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்று என்ற பாடலுக்காக தேசிய விருதினையும் பெற்றுள்ளார். பவதாரிணி இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜாவின் மகளும் , பாடகியுமான பவதாரணி மறைவிற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா, M.P. அவர்களின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான திருமதி பவதாரணி ராஜா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை இளம் வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர் திருமதி பவதாரணி அவர்கள். வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள திருமதி பவதாரணி அவர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.