×

தி.மு.க. அரசின் ‘நீங்கள் நலமா’திட்டம் என்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமம் - ஓபிஎஸ்

 

தி.மு.க. அரசின் ‘நீங்கள் நலமா’திட்டம் என்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமம் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசின் கடந்த மூன்றாண்டு கால ஆட்சி என்பது சோதனைகளின் மொத்த உருவமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, வாகன வரி உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு என பல கூடுதல் சுமைகளை மக்கள்மீது தி.மு.க. அரசு திணித்துக் கொண்டிருக்கிறது. இது போதாது என்று விலைவாசி உயர்வு விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது. இந்தச் சுமைகளை எல்லாம் சுமந்து கொண்டு மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதம் ஒரு முறை மின் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக் கட்டணம் ரத்து, நீட் தேர்வு ரத்து, எரிவாயு மானியம், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்ட முக்கியமான மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம், அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு குறித்த ஆணையை நடைமுறைப்படுத்துதல் போன்றவை நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வினரின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது. போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு இலட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பணியிடங்களை எல்லாம் வெளிமுகமை மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் உரிய எண்ணிக்கைக்கு ஏற்ப, உரிய காலத்தில் நடத்தப்படவில்லை. முடிவுகளை அறிவிப்பதிலும் தாமதம். மொத்தத்தில், தமிழ்நாட்டு மக்களின் நிலைமை சோதனைகள் நிறைந்ததாக காணப்படுகிறது.