ஈபிஎஸ்க்கு பாராட்டு விழா நடத்திய ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்திய காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு நிர்வாகியும் ஆசிரியருமான சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் அரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் சீதாராமன். இவர் பள்ளியில் அதிகம் செல்போன் பயன்படுத்திவருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சீதாராமன் நிர்வாகியாக இருக்கும் காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியது. ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு அதிமுக ஒன்றியச் செயலாளர் போல் செயல்பட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில் சீதாராமன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கு முறையாக வருவதில்லை என்றும், அப்படியே வந்தாலும் செல்போனில் பேசிக்கொண்டே பாடம் எடுப்பதில்லை என்றும் சீதாராமன் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் ஆசிரியர் சீதாராமன் அரசியல் சார்ந்த அமைப்பில் நிர்வாகியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் சீதாராமன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈபிஎஸ்க்கு பாராட்டு விழா நடத்திய மறுநாள் ஆசிரியர் சீதாராமன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
-