×

பழுதடைந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து ஒருவர் பலி

 

பழனி அருகே பழுதடைந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் தண்ணீர் தொட்டியை இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பழனி அருகே கணக்கம்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. கரூர் மற்றும் மணப்பாறையை சேர்ந்த தொழிலாளர்கள் குணசேகரன், வடிவேல், சீனிவாசன் உள்ளிட்டோர் வேலை செய்து வந்தனர். தண்ணீர் தொட்டி மேலே இருந்து மூடியை இடித்து அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென மூடி உடைந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. மூன்று தொழிலாளர்களும் சிமெண்ட் மூடிக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  குணசேகரன் மற்றும் வடிவேல் காயம் அடைந்த நிலையில் மணப்பாறையை சார்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மோடிக்கு அடியில் சிக்கியிருந்த  சீனிவாசனின் உடலை மீட்டனர். விபத்து குறித்து ஆயக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.