×

இணையவழி சூதாட்டம் சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துகிறது - தலைமை செயலாளர் முருகானந்தம்.. 

 

இணையவழி சூதாட்டம் சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்றும், பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.  

 தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (Tamil Nadu Online Gaming Authority) சார்பில்  இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெறும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை (Awareness Campaign) சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நகராட்சி நிர்வாக கூட்டரங்கில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தொழில்நுட்பம் இரு பக்கமும் கூராக இருக்கும் வாள் போன்றது. இணைய வழி சாதனங்களின் பயன்பாடு தொழில் சார்ந்த பயன்பாட்டை தாண்டி பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையவழி விளையாட்டுகள் சமுதாயத்தின் தீமைகளை ஏற்படுத்துகிறது என்பதை கருத்தில் கொண்டு தான் ஆன்லைன் விளையாட்டு சட்டம் 2022 கொண்டுவரப்பட்டது. இணைய வழி விளையாட்டுகளை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இணைய வழி விளையாட்டுகள் மீது மாணவர்களின் மோகம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதை தவிர்ப்பது மட்டுமல்லாமல் இதில்  பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் இணையவழி விளையாட்டுகள் மோகம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்தது. இது இளைய சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையாக உருவாகியுள்ளது. இயற்கைக்கு மாறாக மாணவர்களை இணைய வழி விளையாட்டுகள் மாற்றுகிறது. நிழல் உலகில் அவர்கள் வாழ்வது போன்ற சூழலை உருவாக்குகிறது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்களின் வளர்ச்சியை இணைய வழி விளையாட்டுகள் பாதிக்கிறது.

இணையவழி விளையாட்டுகளை ஜப்பான் சீனா போன்ற நாடுகள் தடை செய்துள்ளது. மாணவர்களை கண்காணிப்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிக முக்கியமான கடமை. தமிழ்நாடு அரசு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் பயன்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  மாணவர்கள் மத்தியில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான பரவலை தடுக்க விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது. ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்” என்றார்.