×

பொய் வழக்குகள் பதிவு செய்யும் காவல் துறையினர் மீது நடவடிக்கை தேவை- ஓபிஎஸ்

 

பொய் வழக்குகள் பதிவு செய்யும் காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் கொடுக்கும் புகார்களை தீர விசாரித்து அதன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது காவல் துறையின் முக்கியப் பணியாகும். ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலையத்தில் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், அங்கு பணிபுரியும் காவல் சார் ஆய்வாளர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், இதனை எதிர்த்து ஒன்பது கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளதாகவும், இதனைக் கண்டித்து தேவர்குளம் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்த பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. இசக்கி ராஜா அவர்கள் தலைமையில் ஏராளமானோர் முற்றுகைப் போராட்டத்திற்கு வந்தபோது, அவர்களை காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாகவும், இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் வன்னிக்கோனேந்தல் கிராமப் பஞ்சாயத்தின் துணைத் தலைவர் திரு. வள்ளிநாயகம் மயக்கம் அடைந்து மானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. 

பொய் வழக்குகள் பதிவு செய்வதை எதிர்த்து அறப் போராட்டம் நடத்தினால், போராட்டம் நடத்தியவர்கள்மீதே தாக்குதல் நடத்துவது என்பது இயற்கை நியதிக்கு முரணானது. ஒன்பது கிராமப் பஞ்சாயத்து மக்கள் ஒன்று திரண்டு வந்து ஒரு காவல் நிலையத்திற்கு எதிராக புகார் சொல்கிறார்கள் என்றால், அதில் நிச்சயம் நியாயம் இருக்கத்தான் செய்யும். எனவே, இதுபோன்ற தருணங்களில் பொதுமக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை விரிவாக ஆய்வு செய்து, அதன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையினரின் கடமை. அதைச் செய்யாமல், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது ஏற்புடையதல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது. பொதுமக்கள் மீதான காவல் துறையின் தாக்குதல் காரணமாக தேவர்குளம் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

எனவே, சட்டம் - ஒழுங்கை கையில் வைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உடனடியாக இதில் தனிக் கவனம் செலுத்தி, பொய் வழக்குகள் பதிவு செய்யும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.