ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் பொது விடுமுறை அளித்திடுக- ஓபிஎஸ்
அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டுமென தி.மு.க. அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் இராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் இராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை (22-01-2024) அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன. இராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், இராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-01-2024 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.