×

சத்துணவுப் பணியாளர்களை வஞ்சித்து வரும் திமுக அரசு - ஓபிஎஸ் கண்டனம்

 

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 313-ல், "தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வாக்குறுதி முக்கியமான வாக்குறுதி என்ற அடிப்படையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் செய்தியாளர்கள்முன் வாசிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 42 மாதங்கள் கடந்த நிலையில், இதுபற்றி வாய் திறக்காதது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

.

கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என
அனைத்துத் தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால், தி.மு.க. அரசு எதற்கும் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.
இந்த வரிசையில், இப்போது சத்துணவுப் பணியாளர்களும் சேர்ந்துள்ளனர். காலமுறை ஊதியம் வழங்குதல், பணிக்கொடையாக ஐந்து இலட்சம் ரூபாய் வழங்குதல், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு வழங்குதல், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டதோடு, தி.மு.க. அரசு தங்களை வஞ்சிப்பதாக சத்துணவு ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்..