×

பேருந்துகளை முழுமையாக பரிசோதித்து இயக்க உத்தரவு!!

 

"அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்" என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் நேற்று மாநகர பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவத்தையடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக மாநகர் போக்குவரத்துக் கழகம், பேசின் பாலம் பணிமனையை சார்ந்த பேருந்து (பேருந்து எண்.BBI0706, தடம் எண்.59/E) வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி செல்லும்போது, காலை 9.10 மணியளவில் SKYWALK என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின் இருக்கை அருகில் பொருத்தப்பட்டிருந்த பலகை உடைந்து விழுந்தது. அந்த இடத்தில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிகழ்வு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, பேருந்தை பழுது பார்க்கும் பேசின் பாலம் பணிமனையை சார்ந்த பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது நிர்வாக ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.