×

காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த உத்தரவு!! 

 

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதற்காக காலாண்டு தேர்வு,  முழு ஆண்டு தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர பருவ தேர்வுகள்,  அலகு  தேர்வுகள்,  மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்ட வருவது வழக்கம்.  அரையாண்டு தேர்வுகளுக்கு அந்தந்த பள்ளிகள் அளவிலோ அல்லது மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. இவை அனைத்தும் ஆசிரியர்களால் குறிப்பாக மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்யும் ஆசிரியர்கள் மூலமாக தயார் செய்யப்பட்டு வந்தன.

இதனிடையில் மாணவர்களின் கற்றல் திறன் மோசமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்த நிலையில்தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வர முடிவு செய்துள்ளது.  அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளி காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்துமாறு, அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19 முதல் 27-ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரையிலும் காலாண்டு தேர்வு நடைபெறவுள்ளது.அத்துடன் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர்2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  முதற்கட்டமாக பொது வினாத்தாள்கள் அனைத்தும் மாநில அளவில் தயார் செய்யப்படும்.  மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் இந்த வினாத்தாள்களை தயார் செய்யும். இவை அனைத்தும் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு அனுப்பப்படும் . அங்கிருந்து 38 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக வினாத்தாள்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். இந்த முறை மூலம் மாணவர்களின் கற்றல் திறனை ஒரே சீராக மதிப்பிட முடியும் என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.