×

பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி..!

 

தேனைப் போன்ற குரலைக்கொண்ட பி.சுசீலா, முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் பி.சுசீலா. சினிமாவில் பாடகியாக உச்சத்தில் இருந்த பி.சுசீலா பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், படமும் பெரிய வெற்றியை பெற்றுத்தந்ததால், அந்த காலத்தில் முன்னணி நடிகையான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகள் தங்களுக்கு பி.சுசீலா தான் குரல் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற "பால் போலவே" என்ற பாடலுக்காக முதன் முறையாக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றார். பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்ற முதல் பாடகி என்ற பெருமை இவருக்கு உண்டு.

இந்நிலையில், 9 மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பி சுசீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும், 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கும் பி.சுசீலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேநேரம், சாதாரண வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சையின் மூலம் வயிற்று வலியை குணப்படுத்தி விடலாம் என மருத்துவர் வட்டாரம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.