×

சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி பிப்.13ம் தேதி ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்!

 

சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் பிப்ரவரி 13ம் தேதி நேரில் ஆஜராகுமார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலையை கொண்டு வந்தால் 10 கோடி ரூபாய் வழங்குவதாக கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

இந்த நிலையில், சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பிப்.13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமைச்சர் உதயநிதிக்கு சம்மன் அனுப்பி பாட்னா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்துகளின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கவுசலேந்திர நாராயணன் என்பவர் பாட்னாவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், வழக்கு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்.13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.